தாப்பட் (Thappad) - என் பார்வையில்

சமூக வலைத்தளங்களில் பல ஆதரவு பதிவுகளை பார்த்த பின்பு நேற்று தான் இந்தப்படத்தை பார்த்தேன். படத்தின் கதை சிம்பிள், சொல்ல நினைத்த கருத்து வலிமையானது ஆனால் அதை சொன்ன விதம் சரியா என்பது என் கேள்வி.!

பெண்களை அடிக்க கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு குடும்பத்தில் பெண்களை அடிப்பது ஒரு சாதாரண நிகழ்வு என்றும், குடும்ப நலனுக்காக ஒரு பெண் அடிகளையும் வலிகளையும் பொறுத்துப் போக வேண்டும் என்றும் நம் சமூகத்தில் இன்றும் மாறாமல் இருக்கும் அந்த பரவலான மனப்பாங்கு ஒழிய வேண்டும் என்பது தான் படம் சொல்லும் கருத்து. ஆனால் அதை விவாகரத்து மூலம் தான் நிறைவேற்ற முடியும் என்பதை ஏற்கமுடியவில்லை.
கதை சுருக்கம் :
வாழ்க்கையில் பல லட்சியங்களை வைத்துக்கொண்டு வேலையில் பிஸியாக அலைந்தாலும், அன்பான கணவன், பொறுப்பான மருமகன், அக்கறையான மகன் என்ற மற்ற பொறுப்புகளில் தன்னால் முடிந்ததை செய்யும் விக்ரம். லண்டன் சென்று குடியேறுவது தான் அவனின் முதல் குறிக்கோள். அதற்காக முழுமூச்சில் உழைக்கிறான்.அந்த நாளுக்காக காத்திருக்கிறான்.
வேலைக்கு செல்லும் கணவனுக்கு கார் வரை ஓடி சென்று 'ஒரு வாயாவது சாப்பிடுங்கள்' என்று ஊட்டிவிடுவதில் இருந்து, மாமியார் தனி நலனில் 'நான் லண்டன் சென்ற பின்பு நீங்கள் தனியாக எப்படி சமாளிப்பீர்கள்' என்று அக்கறை கொள்வது வரை பொறுப்புடன் மட்டும் இல்லாமல் அன்புடனும் அரவணைப்புடனும் நடந்து கொள்ளும் குடும்பத்தலைவி அமிர்தா.
அந்த நாள் வருகிறது. விக்ரம் போன் செய்து நாம் லண்டன் செல்ல ஆபிசில் உத்தரவு வந்துவிட்டதாகவும் அதற்காக இரவு வீட்டில் ஒரு பார்ட்டிக்கு தயார் செய்யும் படியும் கூறுகிறான். பார்ட்டியின் நடுவே விக்ரமின் பாஸ் போன் செய்து நீ லண்டன் போக முடியாது, அந்த இடத்திற்கு வேறொருவரை முடிவு செய்துவிட்டோம் என்கிறார். விக்ரமிற்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. பார்ட்டியில் கலந்து கொண்ட தன் மேனேஜரிடம் இதை பற்றி கேள்வி கேட்க அது காரசார விவாதமாக மாறுகிறது. பார்ட்டியின் நடுவே உச்சகட்ட கோபத்தில் மேனேஜரிடம் விக்ரம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது முதலில் தடுக்க சென்ற நண்பனை நீ ஓரமாக போ என்று கடுமையாக எச்சரிக்கிறான். அடுத்ததாக உள்ளே நுழைந்து விக்ரமின் கையை பிடித்து இழுத்து தடுக்க முயல்கிறாள் அமிர்தா. உறவினர்களும் நண்பர்களும் சுற்றி நின்று பார்க்க, அமிர்தாவை பளார் என்று ஒரு அறைகிறான் விக்ரம்.
அந்த ஒரு அறையும் அதன் பின் சுற்றியிருக்கும் அனைவரின் 'இது பெரிய விஷயம் இல்ல. Free யா விடு அமிர்தா' என்ற மனப்பான்மையும் அமிர்தாவின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனக்கு வாழ்க்கையில் மரியாதையும் சந்தோஷமும் தான் முக்கியம், எனக்கு மரியாதை கிடைக்காத இடத்தில நான் இருக்க மாட்டேன் என்று கிளம்பும் அமிர்தா, விவாகரத்து கேட்டு நிற்கிறார். விக்ரமிற்கு அவளுடன் சேர்ந்து வாழ தான் ஆசை ஆனால் அவளோ இனிமேல் இவனுடன் சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுக்கிறாள். எதேச்சையாக நடந்த தவறு ஏன் இவ்வளவு பெரிதாக செல்கிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏட்டிக்கு போட்டி என விவாகரத்து சண்டை பெரிதாக உருவெடுக்க, உறவுகளுக்குள் பேசி சமாதானமாக வேண்டிய விஷயம் கடைசியில் கோர்ட் வாசலுக்கு சென்று அமிர்தாவின் ஆசைப்படி விவாகரத்தும் கிடைக்கிறது. அத்துடன் படம் முடிவடைகிறது.
முரண்:
ஆணாதிக்கத்தின் மேல் விழுந்த பலமான அடி இந்தப்படம் என்று தான் பல விமர்சனங்களை பார்க்க முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் பெண்மணியமும் கொஞ்சம் தவறாக வழிநடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. உடைந்த பொருளை ஒட்ட வைக்காமல் உடனே தூக்கி எறி என்று அறிவுரை சொல்வது போல் இருக்கிறது இந்தப்படம்.
என்ன தான் அழுத்தமான கருத்தை இந்தப்படம் சொல்லியிருந்தாலும், விவாகரத்தை கையில் எடுத்ததில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.
இதில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம், கணவனிடம் தினமும் அடிவாங்கும் வீட்டு வேலைக்காரியின் அணுகுமுறை. தினமும் அடிவாங்கிப் பழகிய அவள், ஒரு நாள் வீறுகொண்டு எழுந்து பதிலுக்கு கணவனை பளார் பளார் என நான்கு அடி அடித்து அவனின் தவறை புரிய வைப்பாள். பல போராட்டத்திற்கு பின் விவாகரத்து வாங்கிய அமிர்தா காரில் கண்ணீருடன் சென்று கொண்டிருப்பாள், ஆனால் இந்தப்பக்கம் அசாத்தியமாக ஒரே அடியில் பிரச்சனையை தீர்த்த சந்தோஷத்தில் வேலைக்காரி டிவியில் ஓடும் பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு குஷியாக ஆடிக்கொண்டு இருப்பாள்.
ஏழை வேலைக்காரிக்கும், படித்த பணக்கார வீட்டுப்பெண் அமிர்தாவிற்கும் பிரச்சனையும் ஒன்று தான் எதிர்பார்த்த தீர்வும் தான் வேறு அதை கையாண்ட விதம் தான் வேறு. ஆனால் வேலைக்காரிக்கு கிடைத்த சந்தோஷம் அமிர்தாவிற்கு ஏன் கிடைக்கவில்லை. ஏன் ? வேலைக்காரி எதனால் விவாகரத்து கேட்கவில்லை? அமிர்தா ஏன் விக்ரமை பதிலுக்கு அடித்து அவன் தவறை உணரவைக்கவில்லை? இவ்வாறு பல கேள்விகள் எழுகிறது.
மற்றபடி, ஒரு தரமான படம். டாப்ஸியின் நடிப்பு பிரமாதம். நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். படம் பார்த்துவிட்டு உங்களின் கருத்தை பகிருங்கள். உங்களின் பார்வை வேறு விதமாக இருக்கலாம். அதை நான் மறுக்க மாட்டேன்

Comments