வெங்காய சட்னி

"தாத்தா... இது என்ன சட்னி.?"
"அதுவா.. அது வெங்காய சட்னி."
"வெங்காய சட்னியா..?? ம்ம்ம்.. யாரு வச்சா?"
"ஆச்சி தான் வச்சாங்க.. ஏன் நல்ல இல்லையா?
"தாத்தா... நல்லா இல்லையான்னு கேட்க கூடாது..!! நல்லா இருக்குதான்னு தான் கேட்கணும்..!! சரியா.??"
"அடேங்கப்பா... தாத்தா தெரியாம சொல்லிட்டேன்மா.. இனிமேல் நல்லா இருக்குதான்னு கேட்குறேன்.... சட்னி நல்லா இருக்கா செல்லக்குட்டி..?"
கையில பிச்சு வச்சிருந்த சின்ன இட்லி துண்டை, அந்த சட்னில மெல்லமா ரெண்டு மூணு தடவை தொட்டு எடுத்து வாய்ல போட்டு மென்னுக்கிட்டே, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒண்ணு சேர்த்து "சூப்பாரா இருக்கு தாத்தா" அப்படின்னு சொன்னதும் தாத்தாவுக்கு பூரிப்பு தாங்க முடியல.
உடனே "ஏம்மா.. இங்க பாரு உன் பேத்தி என்ன சொல்றான்னு.. நீ வச்ச சட்னி சூப்பரா இருக்காம்."
ஆச்சி சமையல்கட்டை விட்டு வெளிய வந்து எட்டிப்பார்க்க, மறுபடியும் "ஆச்சி.. சட்னி சூப்பர்.."ன்னு சொன்னதும் ஆச்சிக்கும் அவ்வளவு சந்தோஷம்.
பக்கத்துல இருந்து என்னை பார்த்து அலட்சியமா ஒரு லுக்கு விடுறா என் மனைவி. அதுக்கு அர்த்தம் "இந்த மாதிரி சமைச்சு போட்டத பாராட்டணும்னு என்னைக்காவது தோணுதா இந்த மரமண்டைக்கு... தண்டம்.. தண்டம்.." 😂

Comments